Archive for ஒக்ரோபர், 2009

கடவுள் உண்டு என்றேனா?

“சென்ற மாதம் 30 ஆம் தேதி நான் கும்பகோணம் நிதி அளிப்புக்கூட்டத்தில் பேசுகையில் நான் ஒரு கடவுள் உண்டு என்றும் அதனைக் கும்பிடும்படிக் கூறினேன் என்றும் எல்லாப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்களும், பத்திரிக்கையில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள். ‘மெயில்’ போன்று பொறுப்பு வாய்ந்த பத்திரிக்கைகள் கூட இந்த அயோக்கியத்தனமான வேலையைச் செய்துள்ளன. ‘ஆனந்தவிகடன்’ கார்ட்டூன் போட்டுள்ளான். “கண்ணீர்துளி” பத்திரிக்கை ஒன்று “அண்ணா பாதையில் பெரியார்” என்று ஈனத்தனமான முறையில் சேதி வெளியிட்டுள்ளது.

“கண்ணீர்துளிகள்” அதுவரை ஒரு கடவுள் உண்டு என்று கூறினார்களாம்! நான் இல்லை என்று மறுத்து வந்தேனாம்! இன்றுதான் தவற்றை உணர்ந்து ஒரு கடவுள் என்ற அவர்களின் வழிக்கு நான் வந்திருக்கிறேனாம்! பத்திரிக்கைக்காரன்களில் எவனும் யோக்கியன் கிடையாது. எல்லோரும் இப்படிப்பட்ட அயோக்கியனாகத்தான் ஆகிவிடுகின்றான். நானும் மானங்கெடத்தான் இவர்களைப் பற்றிப் பேசுகின்றேன். ஒருவனுக்காவது மானஈனத்தைப் பற்றி கவலையே இல்லையே.

நான் கும்பகோணத்தில் என்ன பேசினேன் நான் இங்கு குறிப்பிட்டதுபோலத்தான் அங்கும் கடவுள், மதம் இவை பற்றி பேசினேன். நம் மக்கள் கடவுள், மதம் இவைபற்றிய முட்டாள்தனங்களை எல்லாம் விட்டொழிக்க வேண்டும். உங்களுக்கு கடவுள் இருந்தாக வேண்டுமென்று எண்ணுவீர்களேயானால் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. எனது இயக்கத்தை சேர்ந்த தோழர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை கிடையாது. அதுபோலவே நீங்கள் இருந்தாக வேண்டும் என்று நான் என்றும் கட்டாயப்படுத்த வரவில்லை.

கடவுள் இல்லையென்று கூற, அதன்படி நடக்க ரொம்ப அறிவு வேண்டும். தெளிவு வேண்டும். எப்படி இல்லை? என்று எந்தவிதக் கேள்வி கேட்டாலும் தெளிவுபடுத்தக்கூடிய முறையில் அறிவாற்றல் ஆராய்ச்சி வல்லமை வேண்டும். இவையெல்லாம் நம் மக்கள் எல்லோரிடமும் இருக்கிறதென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடவுளிருக்கின்றது என்று கூற அறிவு தேவையில்லை. சுத்தமடையன் அடிமுட்டாள் கூட கடவுள் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருக்கலாம். அறிவுக்கு வேலையே இல்லை. அப்படி கடவுள் இருந்தாக வேண்டும் என்று நம்புகின்ற நீங்கள் அறிவோடு நடந்து கொள்ளுங்கள்; உலகத்தில் முஸ்லீம், கிறித்துவர்கள் கடவுள் நம்பிக்கை வைத்து இருப்பது போலாவது நடந்து கொள்ளுங்கள் என்றுதான் விளக்கம் சொன்னேன்.”

Advertisements

22/10/2009 at 11:29 முப பின்னூட்டமொன்றை இடுக

ஒழுக்கம் என்பது….

ஒழுக்கம்: எளியோரை அடிமைப்படுத்துவதற்கான சூழ்ச்சி ஆயுதம்

உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படிப் பெண்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆளவென்று ஏற்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அது போலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும்-எளியோரையும், பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழ பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல்-அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம் என்பன எல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். அதாவது, குழந்தைகளைப் பயமுறுத்தப் பெரியவர்கள், “பூச்சாண்டி, பூச்சாண்டி’ என்பது போல், இவை எளியோரையும் பாமர மக்களையும்-வலுத்தவர்களும் தந்திரக்காரர்களும் ஏமாற்றச் செய்த ஒரு பெரும் சூழ்ச்சியே ஆகும.
உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவைகளைச் செய்கின்ற ஆட்களின் வலிமையையும், அறிவையும் கொண்டு மதிக்கப்படுகிறதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை. சாதாரணமாக, உலகில் “விபச்சாரம்’, “பொய்’, “களவு’, “ஏமாற்றம்’ முதலிய காரியங்கள் ஒழுக்கங்கெட்ட காரியங்கள் என்று சொல்லப்படுகிறது. என்றாலும் இந்தக் காரியங்கள் யாவையுமோ அல்லது ஏதாவது ஒன்றையோ இல்லாத மனிதர் எவரையும் இதுவரையில் உலகத்தில் காண முடியவே இல்லை.

ஒரு சமயம் நம் கண்ணுக்குத் தென்படவில்லையென்று சொல்வதானால், அப்படிச் சொல்லும் மக்கள் ஒவ்வொருவரும் முதலில் தங்களைப் பற்றியே நினைத்துப் பார்த்துத் தங்களுடைய சிறுபிராயம் முதல் இன்றுவரை உள்ள பல பக்குவ வாழ்நாளில் மேற்கண்ட “ஒழுக்கங்கெட்ட’ காரியங்கள் என்பவைகளில் எதையாவது ஒன்றை மனோ வாக்குக் காரியங்களால் செய்யாமல் இருந்திருக்க முடிந்ததா அல்லது செய்யாமல் இருக்கிறார்களா என்று நினைத்துப் பார்த்தால் உண்மை விளங்கி விடும். மற்றும் தங்களுடைய சுற்றத்தார், நண்பர், சுற்றியுள்ள அறிமுகமான ஜனங்கள், நன்றாய்த் தெரிந்த அன்னியர் முதலாகியவர்களில் யாராவது ஒழுக்கத்துடன், கற்புடன் நடந்து வந்ததுண்டா என்று சிந்தித்துப் பாருங்கள்.

உலகில் மக்கள் வாழ்க்கைக்கென்று இருந்து வருகின்ற தொழில்களில் முக்கியமானவைகளாகக் காணப்படுவன விவசாயம், வியாபாரம், கைத் தொழில், கூலி, வக்கீல், உத்தியோகம், வைத்தியம், விலைமாதர் தொழில் ஆகியவை முதல், குருத்துவம், சன்னியாசம், துரைத்தனம், தேசியம் ஈறாக உள்ள அனேக துறைகளாகும். இவற்றின் மூலமே மக்கள் பெரும்பாலும் வாழ்கிறார்கள் என்பதை நாம் பிரத்தியாட்சத்தில் பார்க்கிறோம். இந்த மக்களில் யாராவது ஒருவர், ஒழுக்கமாக நடந்து கொள்வதை நாம் பார்க்கிறோமா? ஒழுக்கம் என்றால் என்ன, அது எது என்கின்ற விஷயத்தில் நாம் இப்போது பிரவேசிக்கவில்லை.

ஒரு வேலைக்காரன் செய்யும் ஒழுக்கங்கெட்ட காரியத்தை அந்த வேலைக்காரன் முன்னிலையிலேயே எஜமான் செய்துவிட்டு, வேலைக்காரனை மாத்திரம் ஒழுக்கங்கெட்டவன் என்று சொல்லுகிறான். இதுபோலவே, எல்லாத் தொழில் துறையிலும் உள்ள மக்களும், அவரவர் வாழ் நாட்களில் ஒழுக்க ஈனமாக நடந்து கொண்டே மற்றவர்களை ஒழுக்க ஈனர்கள் என்று சொல்லி வருகிறார்கள். இவை நாம் ஒரு குறிப்பிட்ட ஒரு சிலரிடம் மாத்திரம் இருப்பதாய்ச் சொல்ல வரவில்லை. ஒழுக்கமாய் மக்கள் யாராலும் நடக்க முடியாது என்றும்; ஒழுக்கம் என்பதாக ஒரு குறிப்பிட்ட குணமோ, செயலோ இல்லை என்றும்; ஒழுக்கம் என்று சொல்லி வருவதெல்லாம் எளியோரையும், பாமர மக்களையும், அடிமைத்தனத்தில் இருத்தி வரப்பயன்படுத்தக்கூடிய சூழ்ச்சி ஆயுதமே தவிர, மற்றபடி அது மக்கள் சமதர்மத்திற்குப் பயன்படக்கூடியது அல்லவென்றும் சொல்லுவதற்காகவே எடுத்துக்காட்டுகின்றோம்.

உண்மையிலேயே “ஒழுக்க ஈனம்’ என்பது ஒன்று உண்டு என்றும்; அது-திருட்டு, பொய், ஏமாற்றம் போன்றதாகிய குணங்கள் தாம் என்றும் சொல்வதாய் இருந்தால், அந்தக் குணங்கள் பெரிதும் நிலையாயக் குடி கொண்டிருக்கும் இடங்கள் அரசர்கள், குருமார்கள், வியாபாரிகள், வக்கீல்கள், தேசியவாதிகள் போன்ற கூட்டத்தார்களிடமே ஆகும். மனிதர்களுக்குத் துன்பம் இழைத்து, அவர்களது அமரிக்கையைக் கெடுத்து, ஏமாற்றி, வஞ்சித்து வாழும் கூட்டங்கள் மேற்கண்ட கூட்டங்களே ஆகும். இது அந்தந்தத் துறையைக் கைகொண்ட ஆட்களை மாத்திரம் அல்லாமல், அந்தந்தத் துறைகளுக்கே ரத்தமும், சதையும், எலும்பும் போலக்கலந்து இருக்கும் காரியங்களுமாகும்.

இந்தக் கூட்டத்தாரைக் கண்டு எந்த மகனும் அசூசைப்படுத்துவதே இல்லை. இவர்களிடத்தில் மக்கள் வெறுப்புக் காட்டுவதும் இல்லை. அதற்குப் பதிலாக, இந்தக் கூட்டத்தாருக்குத்தான் நாட்டிலே மக்களிடம் செல்வாக்கும், மதிப்பும் இருந்து வருகின்றது. மனித சமூகத்திற்கு எலும்புருக்கி வியாதி போன்ற இந்தக் கூட்டம், மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி வருவது என்பது, மக்களின் அறிவீனத்தையும் பலமற்ற தன்மையையும் காட்டுவதேயல்லாமல் வேறில்லை. வாழ்க்கைத் துறையின் ஒழுக்கம்தான் இம்மாதிரி இருக்கிறதென்றால் மற்றபடி, பக்த, பரமார்த்திகம், ஆத்மார்த்தம், ஆசாரத்துவம், மகாத்மாத்துவம் என்பவை முதலான துறைகளிலாவது ஒழுக்கம் என்பதைக் காணமுடிகின்றதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அவையும் இப்படித்தான் இருக்கின்றன என்பதே நமது அபிப்பிராயம்.

22/10/2009 at 11:27 முப பின்னூட்டமொன்றை இடுக

Newer Posts


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.

.