இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்.. ஒரு பார்வை..

23/01/2010 at 10:28 பிப 13 பின்னூட்டங்கள்

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் ஒரு பார்வை :

நாஜிக்களின் அழித்தொழிப்பை அடுத்து தங்களுக்கென சொந்தமாக ஒரு தேசம் என்ற கனவை நனவாக்குவதற்கான உடனடித் தேவையை யூதர்கள் உணர்ந்தார்கள். முன்னொரு காலத்தில் தங்களுக்குச் சொந்தமாக இருந்த ஜெருசலேமின் சுற்று வட்டாரப் பகுதிகளை அவர்கள் தேர்ந்தெடுத்தது உணர்வுப்பூர்வமான முடிவு. ஆனால் “ஆளற்ற ஒரு பிரதேசத்திற்கு, நிலமற்ற யூதர்கள்” என்று அப்போது வெளியிடப்பட்ட கவர்ச்சிகரமான கோஷம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஏமாற்று வாசகம் என்று வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது தெரிகிறது.

1948ல் ஐ.நா சபையின் தலைமையில் பாலஸ்தீனத்திற்கு எதிரான அநீதி விதைக்கப்படுகிறது. யூதர்களுக்கு அந்தப் பகுதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்தே அராபியர்கள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. 1919ன் கணக்குப்படி அங்கு 7 லட்சம் அராபியர்கள் இருந்தார்கள். யூதர்களின் “ஊடுருவல்” 1948க்கு நெடுங்காலம் முன்பே தொடங்கியது. 1880களிலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கிவிட்டார்கள். இன்று இஸ்ரேலின் உளவுப் படை மொஸாத் செய்வது போன்ற அத்தனை தந்திரங்களையும் பயன்படுத்தி இந்த ஊடுருவல் நடந்தது. பணமும் பலவந்தமும் கொண்டு மெல்ல ஊடுருவிக்கொண்டிருந்தவர்களுக்கு ஒரேயடியாக உள்ளே நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது அடால்ப் ஹிட்லரின் யூத அழித்தொழிப்பு வெறித்தனம்.

நாஜிக்களின் அழித்தொழிப்பால் உலகமே யூதர்களின் மீது பரிதாபம் கொண்டிருந்த சமயத்தில், பாலஸ்தீனத்தில் யூதர்கள் செய்த ஆரம்ப கால அநீதிகள் கண்டும் காணாமல் விடப்பட்டது. அராபியர்களிடமிருந்து நிலங்கள் காசு கொடுத்து வாங்க முயற்சி நடந்தது. அந்த நிலங்களை மீண்டும் ஒரு அராபியருக்கு விற்க முடியாது என்ற விதியின்கீழ் நில வர்த்தகங்கள் நடந்தன. அராபியர்களின் தேசத்தை கபளீகரம் செய்யும் முயற்சி இது என்று விரைவில் உணர்ந்துகொண்ட அராபியர்களை நேர் வழியில் விரட்ட முடியாமல் போனதால், பிரிட்டன் ராணுவத்தின் உதவியுடன் பலவந்தமாக அராபியர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்தார்கள்.

கடந்த நூற்றாண்டில் ஒரு இனக்குழுவுக்கு எதிராக நடந்த முதல் மாபெரும் அழித்தொழிப்பின் பாதிக்கப்பட்டவர்களாக இருந்த யூதர்கள், மறு நொடியில் அராபிய இனக்குழுக்களை ரகசியமான வழிகளில் அழித்தொழிக்கும், விரட்டியடிக்கும் புதிய நாஜிக்களாக மாறினார்கள். அகதிகளாக, நாடற்றவர்களாக விரட்டப்பட்ட அராபியர்கள் தங்களுக்கென ஒதுக்கிக்கொண்ட சிறிய பகுதியில்கூட முழு சுதந்திரத்துடன், தன்மானத்துடன் வாழ அனுமதிக்கக்கூடாது என்ற இஸ்ரேலின் வன்முறை மனோபாவம்தான் ஹமாஸ் போன்ற இயக்கங்களுக்கு ஆதரவைப் பெருக்குகிறது.

இரண்டு சமூகங்களும் ஒரு தேசமாக இணைந்திருப்பதை எதிர்க்கும் இஸ்ரேல், தனது நாட்டில் சிறுபான்மையினராகக்கூட அராபியர்கள் இருப்பதை அனுமதிப்பதில்லை. “தென்னாப்ரிக்காவின் நிறவெறி (அபார்தீட்) கொள்கையைப் போன்றதுதான் இஸ்ரேலின் பாலஸ்தீனிய கொள்கை. அதனால் நிறவெறிக்கெதிராக உலக நாடுகள் எவ்வாறு கடுமையாக நடந்துகொண்டதோ அதே போல இஸ்ரேலிடமும் நடந்துகொள்ள வேண்டும்” என்கிறார் ஐ.நா பொது சபையின் தலைவர் மிகேல் டி-எஸ்காட்டோ புராக்மேன். புராக்மேன் இஸ்ரேலை வெறுப்பவர், அதனால்தான் இவ்வாறு சொல்கிறார் என்ற வாதத்தை முன்வைக்கிறது இஸ்ரேல். எனினும் ஜூவ்ஸ் பார் ஜஸ்டிஸ் இன் த மிடில் ஈஸ்ட் என்ற யூத இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரால் நடத்தப்படும் இயக்கம் இஸ்ரேலின் பல பொய்களை அம்பலமாக்கி வருகிறது.

மண்ணின் மைந்தர்களுக்கு தங்கள் வாழ்விடம் குறித்த எந்த உரிமையும் இல்லை என்ற காலனியாதிக்க மனோபாவத்துடன் அராபியர்களை விரட்டியடித்ததுதான் இத்தனைப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்கிறது அந்த அமைப்பின் ஆய்வறிக்கை. எவ்வாறு யூதர்கள் மிகவும் திட்டமிட்டு அங்கிருந்து அராபியர்களை விரட்டிவிட்டு, அதை ஒரு யூத தேசமாக்கினார்கள் என்பதை அந்த அமைப்பு முழுமையான பதிவு செய்திருக்கிறது. இவ்வளவு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இஸ்ரேலுக்குள் பாலஸ்தீன அராபியர்கள் வாழ வழியே இல்லை என்பதால்தான் நோம் சோம்ஸ்கி போன்ற அறிஞர்கள்கூட யூதர்களுக்கும் பாலஸ்தீன அராபியர்களுக்கும் தனித் தனி தேசங்களை கொடுத்துவிடலாம் என்ற முடிவிற்கு வந்தார்கள். இந்த சமரசத் திட்டத்தின் அடிப்படையில் இஸ்ரேல், லெபனான், சிரியா, ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு நடுவில் ஒண்டிக்கொண்டு வாழும்படி உருவாக்கப்பட்ட தேசம் பாலஸ்தீனர்கள் உண்மையில் விரும்பிய தேசம்தானா என்று தெரியவில்லை. இல்லையென்றால் இவ்வளவு ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த பிறகு யாசர் அராபத்தின் கட்சி சரிவைச் சந்தித்திருக்காது. வரலாற்றுரீதியாக பாலஸ்தீனர்களுக்கு உள்ள வாழ்வுரிமையை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளச் செய்ய யாசிர் அராபத் பெரும் பங்காற்றினார்.

தான் தலைவராக வேண்டும் என்பதற்காக யூதர்களுக்குத் தனி தேசம், அராபியர்களுக்குத் தனி தேசம் என்ற சமரசத்தையே முன்வைத்தார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்படுவது உண்டு. எனினும் யூத-அராபிய தரப்பில் நிலவிய மிகுந்த மனக் கசப்பால் அவர்கள் ஒரு தேசத்தின்கீழ் வாழ்வது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்பது ஏற்கக்கூடிய வாதம்தான். ஆனால் யாசர் அராபத்தின் சமாதான முயற்சிகளுக்கு நடுவே ஆயுதம் தாங்கிய ஹமாஸ் போன்ற அமைப்புக்களுக்கு செல்வாக்கு அதிகரித்து வந்தது.

யாசர் அராபத்தின் மரணத்திற்குப் பிறகு அவரது கட்சி இன்னும் பலவீனமானது. அவருடைய கட்சியுடனும் இஸ்ரேலும் அதன் காட் பாதரான அமெரிக்காவும் கைகுலுக்கத் தொடங்கியது பாலஸ்தீனியர்களிடையே எதிர்மறை எண்ணத்தை விதைத்திருக்க வேண்டும்.

அரபு நாடுகளில் தனக்கு சாதகமான பொம்மை அரசுகளை நிறுவும் அமெரிக்கக் கனவு மீண்டும் பலித்துவிட்டது போல் தெரிந்த சமயத்தில் பாலஸ்தீனத்தில் அரசியல் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது. அரை நூற்றாண்டு காலமாக பாலஸ்தீனியர்கள் மனதில் விதைக்கப்பட்ட வெறுப்பு ஹமாஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தின் வடிவில் வளர்ந்து நின்றது. 2006 நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் பெரு ஆதரவுடன் வெற்றி பெற்றது. இதுவரை தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்திய அமைப்பு சுதந்திரமாக நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றதை இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

புதிய பாலஸ்தீன அரசுக்கு கொடுத்து வந்த அத்தனை நிதியுதவியையும் நிறுத்தினார்கள். ஒரு தேசத்திற்கு அடித்தளம் போட்டுக்கொண்டிருந்த பாலஸ்தீனத்திற்கு அது பேரிடி. வெளிநாட்டு உதவி இல்லாவிட்டால் அரசு ஊழியர்கலின் சம்பளத்தைக்கூட போட முடியாத நிலை. ஹமாஸை பலவீனப்படுத்துவதற்கா தேர்தலில் தோற்ற பிரதமர் மஹ்மூத்தின் பதா கட்சியின் பின்னால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அணிவகுத்தன. ஹமாஸ்-பதா இடையே குட்டி போர் வெடித்தது.

இஸ்ரேல் கட்டியுள்ள 750 கிலோமீட்டர் நீளமுள்ள இஸ்ரேல் -பாலஸ்தீன தடுப்பு சுவர்….இது ஜெர்மனியின் பெர்லின் சுவரை விட பலமடங்கு பெரியது..

அமெரிக்கா செய்த அரசியலால் இன்று பாலஸ்தீனம் ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள காசா, பதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் மஹ்மூத் அப்பாஸ் கட்டுப்படுத்தும் வெஸ்ட் பேங்க் என தனித் தனி பிரதேசங்களாக பிளவுபட்டிருக்கிறது. இடையிடையே பயங்கரவாதி என்று வர்ணித்த ஹமாஸுடன் தற்காலிக அமைதி ஒப்பந்தங்களை செய்துகொள்ளத் தயங்காத இஸ்ரேல், அந்த ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றும் பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. கடைசியில் கையெழுத்தான ஒப்பந்தத்திபடி பாலஸ்தீனுக்குள் வரும் பொருட்களை அனுமதிக்க வேண்டும்.

ஆனால் இஸ்ரேல் ஒன்று பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிப்பதே இல்லை அல்லது மிகக் குறைவான அளவிலான பொருட்களையே அனுமதித்து வருகிறது. இதனால் மருந்து, உணவுப் பொருட்களின் பற்றாக்குறை பாலஸ்தீனத்தை ஒரு குட்டி சோமாலியா போல மாற்ற அச்சுறுத்துகிறது. இந்த நிலையில்தான் இந்த டிசம்பரில் முடிவுக்கு வரும் அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாததைக் கண்டித்து கடந்த நான்கு வாரங்களில் இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களை அதிகரித்தது ஹமாஸ்.

அதையே ஒரு காரணமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலஸ்தீனை மீண்டும் ஆக்கிரமித்திருக்கிறது இஸ்ரேல். அத்தியாவசியப் பொருட்கள் என்ற பெயரில் ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு வருகிறார்கள் என்று இஸ்ரேலும் பிரிட்டனும் அமெரிக்காவும் குற்றம்சாட்டுகின்றன. தேசங்களின் இறையாண்மையைவிட தங்களின் நோக்கங்களே பெரிது என்று கருதும் இஸ்ரேல் மற்ற பல நாடுகளின் எல்லையில் ரகசிய ஆபரேஷன்களை நடத்தியுள்ளது. இன்னும் முழுமையான தேசமாக உருவெடுக்காத பாலஸ்தீனத்தினத்திற்குள் அப்படி எக்கச்சக்கமான “ஆபரேஷன்கள்” நடத்தப்பட்டுள்ளன. தனக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் கருதும் ஆட்கள் கடத்திச் செல்லப்படுவார்கள்.

அவர்களில் சிலர் நிரந்தரமாக காணாமல் போவார்கள். அப்படி சமீபத்தில் ஒரு டாக்டர் தம்பதிகளை கடத்திச் சென்றதுதான் ஹமாஸ் இரண்டு இஸ்ரேல் ராணுவ வீரர்களைக் கடத்தக் காரணம் என்கிறார் நோம் சாம்ஸ்கி. இஸ்ரேல் சிவிலியன்களை பிடித்துச் செல்வதை பிரச்சனையாக்காத உலக நாடுகள், ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் ராணுவ வீரர்களைப் பற்றி மிகுந்த அக்கறை காட்டுவதில் உள்ள அரசியலை கண்டிக்கிறார் சாம்ஸ்கி. பாலஸ்தீனுக்கு உதவ வேண்டிய சுற்றியிருக்கும் முஸ்லிம் நாடுகள் ஆளுக்கொரு அரசியல் காரணங்களால் ஒதுங்கி நிற்பது அதைவிட பெரிய வேடிக்கை. எகிப்தின் எல்லையில் உள்ள பாலஸ்தீன எல்லைகூட அத்தியாவசியப் பொருட்களுக்காக திறந்துவிடப்படவில்லை. எவ்வாறு இலங்கையில் புலிகள் நலனையும் தமிழர்கள் நலன்களையும் பிரித்துப் பார்க்க மறுக்கிறார்களோ அதே போல பாலஸ்தீனத்தில் ஹமாஸின் நலனையும் அராபியர்களின் நலனையும் பிரித்துப் பார்க்க அராபிய தேசங்கள் மறுக்கின்றன.

தங்களின் ஜனநாயகமற்ற அரசுகளுக்கும் ஹமாஸின் எழுச்சி அச்சுறுத்தலாக மாறும் என்று அராபிய தேசங்கள் அஞ்சுகின்றன. சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா இந்த விஷயத்தில் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டிருப்பது தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பயத்தால்தான். யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற பெயரில் ஒரு தேசமாக வாழும் உரிமையையே மறுக்கும் அளவுக்கு தீவிரமான கொள்கை கொண்ட ஹமாஸ் ஒரு சகிப்புத்தன்மைமிக்க சக்தி அல்ல என்பது உண்மைதான். ஆனால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தலைவர்கள்கூட ஜனநாயக சக்திகள் அல்ல என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும். பிப்ரவரியில் நடக்கவிருக்கும் இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்காமலிருப்பதற்காகத்தான் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எஹுத் பராக் பாலஸ்தீனுக்குள் தனது படைகளை ஏவியுள்ளார்.

முன்னாள் பிரதமர் பின்யாமின் நெதன்யாகூதான் ஜெயிப்பார் என்ற கணிப்புகளை சிதறடிக்க அவருக்கு இந்த வாய்ப்பு உதவியிருக்கிறது என்று இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் முழு ஆதரவாளராக இருக்கும் அமெரிக்க அதிபர் புஷ் இந்த மாத இறுதியில் பதவியிறங்கும் முன்பு இந்தத் தாக்குதலை நடத்தியாக வேண்டும் என்று அவசர அவசரமாக இதைச் செய்துள்ளார்கள். ஹமாஸ் ஏவிய ராக்கெட்டுகள் அவர்களுக்கு ஜெயிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. சொந்தமாகத் தயாரித்த அரைகுறை ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவியது ஒரு வகை கவன ஈர்ப்புதான்.

தங்கள் மீது போடப்பட்டிருக்கும் பொருளாதார, வாழ்வாதார முற்றுகையை உடைக்க உலக நாடுகளின் கவனத்தை மத்திய கிழக்கை மூலம் திருப்ப வேண்டியிருந்தது. ஹமாஸ் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியிருந்தாலும் அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. ஆனால் இஸ்ரேலின் ஒரு வார வான் தாக்குதலில் 400க்கு மேற்பட்ட பாலஸ்தீன பெண்கள், குழந்தை, போலீஸ்காரர்கள் இறந்திருக்கிறார்கள். யூதாயிசம், இஸ்லாம், கிறிஸ்தவம் என உலகின் மூன்று பழம்பெரும் மதங்களின் பிறப்பிடம் ஜெருசலேம். மதங்களின் பிறப்பிடம் இன்று, மதங்களுக்கிடையிலான மோதலுக்கான ஊற்றுக்கண்களாக மாறியிருக்கிறது.

தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து, தங்களையே அகதிகளாக விரட்டிய இஸ்ரேலுக்கும் அந்நாட்டுக்கு உதவும் அமெரிக்காவுக்கும் எதிரான உலக முஸ்லிம்களின் கோபத்தை கிறிஸ்தவ, யூத மதங்களின் மீதான கோபமாக அடிப்படைவாதிகள் திருப்புகிறார்கள். யூதர்களோடும் அமெரிக்காவோடும் தொடர்புடைய இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளும் அதன் பின்விளைவுகளை சந்திக்கின்றன. வெறுப்பு விதைக்கப்பட்ட இடங்கள் எல்லாம் அடிப்படைவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் வேட்டைக் களமாக மாறுகின்றன.

இதில் அடிப்படைவாதிகளையும் தீவிரவாதிகளையும் மட்டும் குறை சொல்லி பிரயோஜனமில்லை. இஸ்ரேலிய யூதர்கள வெறுப்பை விதைக்காமலிருந்திருந்தால் ஒரு ஹமாஸ் உருவாகியிருந்திருக்காது. சிறுபான்மையினரின் கழுத்தை நெரிக்கும் விஷயத்தில் ராக்கெட்டுகளும் செஞ்சிலுவைகளும் தடையாக இருப்பதை அரச பயங்கரவாதத்தால் ஜீரணித்துக்கொள்ள முடியாததை புரிந்துகொள்ள முடிகிறது.

Advertisements

Entry filed under: இஸ்ரேல்- பாலஸ்தீனம்.

பிடல் காஸ்ட்ரோ… தலாய் லாமா..

13 பின்னூட்டங்கள் Add your own

 • 1. செல்வகுமார்  |  11:05 முப இல் 24/01/2010

  அருமையான கட்டுரை அண்ணா , இஸ்ரேல் பிரச்சினை குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது ,இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி

  மறுமொழி
 • 2. sri  |  12:55 பிப இல் 09/02/2010

  thank you sir

  மறுமொழி
 • 3. kannan  |  6:04 பிப இல் 09/04/2010

  மிகவும் நன்றி , இஸ்ரேல் பிரச்சினை குறித்து எதுவும் எனக்கு தெரியாது, இப்போ விளக்கமாக நீங்க எழுதியதை பார்த்து தெரிந்துக்கொண்டேன் நன்றி..

  மறுமொழி
 • 4. M.B Naleem  |  9:50 பிப இல் 11/07/2010

  it is a very good essay to know about palstine struggle

  மறுமொழி
 • 5. raja  |  10:42 முப இல் 26/08/2010

  யூதர்களின் பூர்வீக வாழிடம்,கலாச்சாரம்,பண்பாடு ஆச்சரிய மானவைகள்.அதை புரிந்து கொள்ள முடியாதவன் பதிவு எழுதுவது குருடன் பல வண்ணங்களை விவரிப்பது போன்றது.

  மறுமொழி
 • 7. v.sivadevan  |  6:09 பிப இல் 11/09/2010

  thanks to give information

  மறுமொழி
 • 8. rmunais  |  12:10 பிப இல் 25/11/2010

  as a undergraduate student said this articalis very usefull each$every conflict resolution subject [arab-isreal] thanks allot sir

  மறுமொழி
 • 9. rmunais  |  12:13 பிப இல் 25/11/2010

  this artical is very use full for conflict resolution subject thanks allot sir.

  மறுமொழி
 • 10. Adirai Iqbal  |  1:23 பிப இல் 05/02/2011

  நடு நிலைமையான ஆக்கம்

  மறுமொழி
 • 11. sikkander  |  1:41 பிப இல் 30/06/2011

  Dear Brother i hope you are very fine……very nice Article,your vision is 100% right. ,unmaiyai ulagirku urakka sollum oruvaraga ungalai parkirean.

  மறுமொழி
 • 12. tamilan  |  10:12 முப இல் 06/07/2011

  i don’t know about palestine issue…. this will be great article…

  மறுமொழி
 • 13. AMEEN U.L.M  |  6:09 பிப இல் 03/01/2012

  Satthiyam vellum.unmai urangathu.PALASTINE VAALHA.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.

.


%d bloggers like this: