Archive for ஏப்ரல், 2010

அங்காடித் தெரு… திரை விமர்சனம்.

 

 அங்காடித் தெரு..     தமிழ் சினிமாவின் ஒரு தைரியமான படைப்பு.

 அனைவரும் பார்க்க வேண்டிய காவியம்.

 

 

நடிகர்கள்: மகேஷ், அஞ்சலி, ஏ வெங்கடேஷ், பழ கருப்பையா, பிளாக் பாண்டி
ஒளிப்பதிவு: ரிச்சர்டு எம் நாதன்
வசனம்: ஜெயமோகன்
படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத்
இசை: விஜய் ஆண்டனி – ஜிவி பிரகாஷ்
பின்னணி இசை: விஜய் ஆன்டனி
பாடல்கள்: நா முத்துக்குமார்
மக்கள் தொடர்பு: டைமன்ட் பாபு

எழுத்து – இயக்கம்: ஜி வசந்தபாலன்   தயாரிப்பு: கே கருணாமூர்த்தி – சி அருண்பாண்டியன்

துயரத்துக்கு வாழ்க்கைப்பட்டு அங்காடித் தெருக்களில் பல நூறு கால்களில் மிதிபட்டாலும், நம்பிக்கை என்ற சின்ன நூலையே கயிறாகக் கட்டி மேலே எழுந்து நிற்க முயலும் சாமானிய மக்களின் கதை இது.

கோடம்பாக்கத்தில் நிறைய பேர் படம் எடுக்கிறார்கள். பாடம் சொல்கிறேன் என்று கழுத்தறுக்கிறார்கள். ஆனால் மிகச் சிலர்தான் மக்களுக்கான படத்தை, மனித நேயத்தோடு படமாக்குகிறார்கள். அவர்களில் ஒருவர் வசந்தபாலன்…

பெரும் அலங்காரங்களுடன் கம்பீரமாய் நிற்கும் வணிக நிறுவனங்களும் அதன் உள்ளார்ந்த பிரமிப்புகளையும் மட்டும் பார்த்து ரசிக்கிறோம். ஆனால் அந்த ஜொலிப்பின் பின்னிருளில் குப்பையாய் குவிந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான மனித உடல்களை நாம் அறிவதே இல்லை. பத்திரிகைச் செய்திகளாக அவை வந்தாலும் ஒரு நாள் கழிந்தது என்று தூக்கிப் போடும் நம் அலட்சியத்தின் மீது விழுந்த சவுக்கடிதான் இந்த அங்காடித் தெரு.

தமிழ் சினிமாவில் வந்த மிகச் சிறந்த படங்களுள் ஒன்று என்ற சம்பிரதாய வார்த்தையைத் தாண்டி, துணிச்சல் மிக்க முயற்சிகளின் சிகரம் என்று மெச்சிக் கொள்ளும்படியான படமும் கூட (ஐங்கரன்காரர்கள் குப்பை படங்களை முதலில் விட்டு, இப்போது தரமான படங்களால் கோடம்பாக்கத்துக்கு தோரணம் கட்டுகிறார்கள்!).

தெற்கத்திய கிராமம் ஒன்றில் வறுமையின் அத்தனை குரூரங்களையும் போகிறபோக்கில் நெட்டித் தள்ளிவிட்டு சந்தோஷமாக வளைய வரும் ப்ளஸ் டூ இளைஞர்கள் ஜோதி, பாண்டி (மகேஷ், பிளாக் பாண்டி). ரிசல்ட் வரும் நாளன்று விபத்தில் தந்தையைப் பறிகொடுக்கிறான் ஜோதி. பள்ளியிலேயே முதல் மதிப்பெண்களுடன் தேறியும், வறுமை ஜோதியை சென்னைக்கு விரட்டுகிறது, ஒரு பெரிய கடையில் வேலைக்காரனாய். அவனுடனே வருகிறான் நண்பன் பாண்டியும். துணிகள், பாத்திரங்கள், பலசரக்குகளோடு மனிதத்தையும் சேர்த்தே விற்றுக் காசாக்கும் அந்தக் கடையின் பிரமாண்டத்தைப் பார்த்து மிரளும் அவர்கள், அடுத்தடுத்து அங்கே நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பார்த்து விக்கித்து நிற்கிறார்கள். வாழ வேறு வழியில்லாதவர்களால் அதிகபட்சம் இவ்வளவுதான் யோசிக்க முடியும். அடுத்து மறுபேச்சில்லாமல் அந்த நரகத்துக்குள் வாழப் பழகிக் கொள்கிறார்கள்.

சந்திக்கிறார்கள். அதே கடையில், அதே போன்ற துன்பங்களைச் சகித்துக் கொண்டு வேலை செய்யும் பெண்கள் இவர்கள். ஆரம்பத்தில் மோதிக் கொள்கிறார்கள். தன்னை மாட்டிவிட்ட கனியை பழிவாங்க அவளை கருங்காலி (ஏ வெங்கடேஷ்)யிடம் காட்டிக் கொடுக்க, அவன் கனியை மறைவாகக் கூட்டிப் போய் தண்டனை என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தல் செய்கிறான் (‘மாரைக் கசக்கிறான்… வேற வழியில்லை. பொறுத்துக்கிட்டேன்’).

இதில் கலங்கிப் போகும் ஜோதி, அதன் பிறகு கனியுடன் நேசம் பாராட்ட, அந்த நேசம் இயலாமையில் உழலும் இரண்டு இளம் மனங்களின் பற்றுதலாக மாறுகிறது.

இந்த நேரத்தில் உடன் வேலை பார்க்கும் சௌந்தரபாண்டி – ராணி இருவரும் காதலித்து, அது கருங்காலிக்குத் தெரியவர, அடுத்து நடப்பது நெஞ்சை உறைய வைக்கும் நிஜம். இவர்களுக்கு நேர்ந்ததைப் பார்த்த பிறகு கனியை விட்டு விலக நினைக்கிறான் ஜோதி. ஆனால் சின்ன ஊடலுக்குப் பின் சேருகிறார்கள். இந்தக் காதலும் ஒரு நாள் தெரிய வருகிறது கருங்காலிக்கும் கடை முதலாளி அண்ணாச்சிக்கும் (பழ கருப்பையா).
.
.
அடுத்து நடப்பதெல்லாம், ‘நாம் வாழும் நாகரீக சென்னையிலா இந்தக் கொடுமையெல்லாம் நாளும் அரங்கேறுகின்றன… பளபளக்கும் இந்த மலிவு விலைக் கடைகளிலா இத்தனை பயங்கரங்களும் நாளும் நடக்கின்றன’ என நெஞ்சைப் பதற வைக்கிறது.

அவற்றிலிருந்து தப்பித்து வாழ்க்கையை எப்படி அதன் போக்கில் வாழ்கிறார்கள் இந்த விளிம்பு மனிதர்கள் என்பது படத்தின் இறுதிப் பகுதி. நிச்சயம் இது க்ளைமாக்ஸ் அல்ல… உலகிலிருந்து துரத்தியடிக்கப் பார்க்கும் வாழ்க்கையை, திரும்பி நின்று முறைத்து, வலிகளைத் தாங்கி வாழும் முயற்சியின் தொடர்ச்சி…இது கதையல்ல… நாம் அன்றாடம் படிக்கும், கேள்விப்படும் பல நிஜங்களின் தொகுப்பு.

எல்லையைத் தாண்டித்தான் தீவிரவாதிகள் வரவேண்டும் என்பதோ, அவர்கள் குண்டு வைத்தால்தான் நாடு சீரழிந்து போகும் என்பதோ உண்மையல்ல.. நாட்டுக்குள்ளேயே பள பள சட்டைகளில் பவிசாக வலம் வந்தபடி, சட்டத்தையும் ஆட்சியையும் தனது கரன்சியால் அடித்து வாழும் அண்ணாச்சிகளும், அவர்களிடம் மாமூல் வாங்கும் காவலர்களும் கூட பல மடங்கு ஆபத்து மிகுந்த தீவிரவாதிகளே.

இந்த உண்மையை ஒரு புலனாய்வு நிருபரின் துணிச்சலோடும், மனிதம் மீது தீராக் காதல் கொண்ட ஒரு நியாயவானின் கோபத்துடனும் படமாக்கியிருக்கும் வசந்த பாலனை தமிழ்சினிமா உச்சி முகர்ந்து பாராட்ட வேண்டும்!

ஒரு நல்ல கலைஞன் சமூகத்துக்கு செய்ய வேண்டிய பங்களிப்பு இதுவே!
நிகழ்வுகளை அவர் காட்சிப்படுத்தியிருக்கும் விதம், அவற்றில் பொதிந்துள்ள அர்த்தங்கள் எல்லாமே சினிமா மீதான வசந்த பாலனின் நேசத்தைச் சொல்லுகின்றன.

.
அவரது உணர்வுகளை கச்சிதமாக வார்த்தைகளில் வடித்துள்ளவர் ஜெயமோகன். காதலன் மீது கொண்ட கோபத்துக்கு கனி சொல்லும் விளக்கம்: “இவன் ஒருத்தன்கிட்டேயாவது மானம் ரோஷத்தோட இருக்கிறேனே

விபச்சாரத்திலிருந்து மீண்டு குடும்பப் பெண்ணாக மாறியவள் தனது குட்டையான கணவனைப் போலவே குழந்தை பிறந்ததற்கு இப்படிச் சொல்லி மகிழ்கிறாள்:
“இனி யாரும் இந்தப் பிள்ளையை எவனுக்குப் பெத்தாளோன்னு சொல்ல மாட்டாங்களே”
 
தனது உணர்வு யாருக்கும் தாழ்ந்ததல்ல, தானும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற மனிதனின் அடிமன உணர்வாக ஜொலிக்கின்றன வசனங்கள். மூன்று வேளை சாப்பாட்டுக்கும் எட்டு மணி நேர தூக்கத்துக்கும்தான் மனிதன் இந்த பாடுபடுகிறான். ஆனால் அதைப் பெற அந்த இளைஞர்கள் படும் கொடுமை இருக்கிறதே… எழுத்துக்கும் அப்பாற்பட்ட கோரம் அவை.
.
தங்கை அகாலத்தில் வயதுக்கு வந்துவிட்டாள்.. அந்தப் பெண்ணை நாயினும் கேவலமாக ஒரு குப்பைத் தொட்டி போன்ற இடத்தில் வீசி எறிகிறாள் அவளது ‘ஆச்சார’ எஜமானி. உதவிக்கு யாருமில்லை.. ஆனால் சடங்கு செய்தாக வேண்டும் என்று தவிப்பில், தன் கையறு நிலையை எண்ணி நடுத்தெருவில் அந்தப் பெண் கலங்குவதும், வழியில் அம்மன் கோயிலில் இருக்கும் தாய்மார்கள் விஷயமறிந்து ஆறுதலாக அணைத்து அம்மனுக்கு எதிரிலேயே அத்தனை ஆதரவுடன் சொந்தங்களாய் நின்று சடங்கு செய்வதும்… படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் நெகிழ்ச்சி, உணர்ச்சிக் கொந்தளிப்பு என கண்களை நிறைத்தது.
.
அவதாரத்தில் அம்மன் என்றாலும் உலகாளும் தாய்க்கு முன் தீட்டு என்ன இருக்கிறது? என்று திருப்பிக் கேட்கும் காட்சி இது. மாடி வீடுகளிலும், ‘மடி – ஆச்சார’ மனிதர்களிடமும் இல்லாத மனிதம், மரத்தடியில் உள்ள அம்மன் கோயிலில் இருக்கிறது பார் என்று நடுமண்டையில் நச்சென்று குட்டும் காட்சி இது!
.
.
மகேஷை ஒரு புதுமுகமாக நினைக்க முடியவில்லை. அண்ணாச்சி கடைப் பையன்களின் மொத்த வலியையும் உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார். சிறப்பான எதிர்காலம் உண்டு, அடை மொழிகளுக்குள்ளும் வெட்டி பந்தாக்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் இருந்தால்.
இதனை தனது முதல் படம் என்றே தைரியமாகச் சொல்லிக் கொள்ளலாம் அஞ்சலி. நமக்கு வெகு நாட்களாகப் பழக்கப்பட்ட முகம் மாதிரி அத்தனை இயல்பான நடிப்பு.
.
அண்ணாச்சியாக வரும் பழ கருப்பையா, அவரது கைத்தடியாக வரும் ஏ வெங்கடேஷ் இருவருமே மிரட்டியுள்ளனர். சினேகாவை பொருத்தமாகப் பயன்படுத்தி படத்துக்கு நம்பகத் தன்மையை அதிகரித்துள்ளார் இயக்குநர்.
விஜய் ஆண்டனியின் இசையில் வரும் ‘அவள் அப்படி ஒன்றும் அழகாயில்லை…’ மனதை அள்ளுகிறது. எளிய இனிய சந்தம்… பாடல் வரிகள். பின்னணி இசையில் மனதை அறுக்கிறார். இன்னொரு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ்குமார் இருந்தாலும் அவர் இசையமைத்துள்ள பாடல்கள் படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர்கள் மாதிரிதான் வருகின்றன.
ரிச்சர்டின் ஒளிப்பதிவு அத்தனை எதார்த்தம். தேரிக் காடுகளையும் ரங்கநாதன் தெருவையும் அவற்றின் இயல்பு மாறாமல் காட்டியுள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இன்னும் கூட சில காட்சிகளில் கத்தரி வைத்திருக்கலாம்.
.
இடைவேளைக்குப் பின் தொடர்ந்து சோகம் சோகம் சோகம் என காட்சிகளின் கனம் மனதை அழுத்துகிறது. அதுவே ஒருகட்டத்தில் மனதைக் களைப்புற வைக்கிறது. இரண்டு மணி நேரம் ஒரு சோக வாழ்க்கையைப் பார்க்கும் நமக்கே இப்படி என்றால்… அதை நித்தம் அனுபவிக்கும் அந்த இளைஞர்களின் நிலை…?
இந்தப் படத்துக்குப் பிறகாவது அண்ணாச்சிகள், தங்கள் கடை ஊழியர்களை மனிதர்களாக மதித்து நடத்தினால், அதுதான் வசந்தபாலன் என்ற சமூக அக்கறை மிக்க ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் பெரும் விருதும் மரியாதையும். அதை விட்டுவிட்டு மான நஷ்ட வழக்கு என்று மல்லுக்கட்ட முயன்றால்… அவர்களை மனிதகுலம் மன்னிக்காது!
 
வாழ்த்துக்கள் வசந்த பாலன்!
 .
இது  போன்ற  சினிமாவை  வரவேற்ப்போம்

Advertisements

06/04/2010 at 10:14 பிப 3 பின்னூட்டங்கள்


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.